தினம் ஒரு மூலிகை – வில்வம்
வில்வம்.
வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. எல்லாச் சிவன் கோவில்களிலும் இருக்கும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியான ஓடாக இருக்கும். விதைகள் அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம். இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில்களில் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.
பயன்கள்
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.
வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம். சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் குணப்படுத்தும்.
வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்றவற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.
வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.
வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடி செய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் குணமடையும்.
வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.
வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டு அரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப்படும் கரும்புள்ளிகளில் தடவி காலையில் முகத்தை கழுவ வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.
வேறு பெயா்கள்
கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம் போன்றவை
தாவரப்பெயா்
AEGLE MARMELOS இது RUTACEAE என்ற தாவரக் குடும்பத்தைச் சாா்ந்தது.