தினம் ஒரு மூலிகை – கொன்றை
கொன்றை.
கொன்றை தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப்படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. பல கிளைகள் விடும், ஒவ்வொரு கிளையிலும் பல சிறு கிளைகள் தோன்றி அதில் கொத்துக் கொத்தாக இலைக் கொத்துக்கள் தோன்றும், இதன் இலை நெல்லி இலை போல இருக்கும். ஒரே காம்பில் பல இலைகள் ஒன்றுக்கொன்று எதிர் வரிசையாகத் தோன்றும் ஒவ்வொரு இணுக்கு சேருமிடத்திலும் ஒரு சிறு கிளை தோன்றி, அதில் பல நரம்புகள் தோன்றி அந்த நரம்புகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் விட்டு மஞ்சள் நிறப் பூக்கள் மலரும். இந்த பூ ஆவரம் பூவின் வடிவத்திலிருக்கும். பூவின் நடுவில் 5லிருந்து6 மகரந்த நரம்புகள் வெளியே நீண்டிருக்கும். நீண்ட உருளைவடிவக் காய்களை உடைய இலையுதிர் மரம். இது விதை மூலம் இனப் பெருக்கம் ஆகின்றது.
பயன்கள்
வேர்ப் பட்டை 20 கிராம் பஞ்சு போல் நசுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 5 கிராம் திரிகடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும் மாலையில் பாதியும் சாப்பிட காய்ச்சல் தணியும் இதய நோய் குணமாகும்
கொன்றை மரத்தின் வேர்ப்பட்டையைக் கொண்டு வந்து கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, ஒரு கை பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகாக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலையாகக் கொடுத்து வந்தால் வாய்வு சம்பந்தமான வலிகள், வாத சம்பந்தமான வலிகள் உடலில் தோன்றும் அரிப்பு, சிறு சிரங்குகள், படிப்படியாக மறைந்து விடும்.
கொன்றைப் பூக்களில் கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு 100 கிராம் நல்லெண்ணையை விட்டு நன்றாகக் காயவைத்து பூக்கள் சிவந்து வரும் சமயம் இறக்கி, எண்ணெய் ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு காது சம்பந்தமான ஏற்படும் கோளாறுகளுக்கு, காலை மாலை ஒரு காதுக்கு இரண்டு துளி வீதம் விட்டு பஞ்சடைத்து வந்தால் , காது சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். இலைகளை கண் இமைகளின் மேல் இரவு படுக்குமுன் வைத்துக் கட்டி காலையில் அவிழ்த்துவிட வேண்டும் இந்த விதமாக ஐந்து நாட்கள் கட்டி வந்தால் கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.
வேறுபெயா்
பெருங்கொன்றை, சிறுகொன்றை
தாவரப்பெயா்
CASSIA FISTULA இது CAESALPINIACEAE என்ற தாவரக்குடும்பத்தைச் சோ்ந்தது.