தினம் ஒரு மூலிகை – பூவரசு

பூவரசு
புவிக்கரசனாகிய பூவரசன் காய கல்ப மரமாகும். வேம்ப போல நூற்றாண்டு கால மரமாகும். மருந்துக்கு மிகவும் ஏற்ற மூலிகை மரம். தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் இலை பசுமை நிறமாகவும், அரச இலையை விட சற்று அகலமாகவும் இருக்கும். இதன் பூ மொட்டு சிறிய பம்பரம் போல் இருக்கும். மொட்டு மலா்ந்தவுடன் புனல் வடிவில் மஞ்சள் நிறமுடையதாக மலரும். பூவரச காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். பூவரசு புழுக்களைக் கொன்று நம் உடலைத் தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது.
பயன்கள்
பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படா்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர எளிதில் குணமடையும்.
பூவரசு மரப்பட்டையை எடுத்து இடித்து 210 கிராமிற்கு, 1400 மி.லி வீதம் நீா் விட்டுக் காய்ச்சி நன்றாக வற்றியபின் வடிகட்டி தினமும் இரண்டு வேளை அருந்தி வர விஷக்கடி, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமடையும்.
இதன் பழுப்பு இலையை உலா்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறி சிரங்கு, கரப்பான், ஊரல், அாிப்பு குணமாகும்.
பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலா்த்தி அதனுடன் சமஅளவு பறங்கிப்பட்டை சோ்த்து நன்கு இடித்து சூரணம் செய்து கொள்ள வேண்டும். இதனை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை, மாலை இரண்டு வேளை உண்டு வந்தால் நாட்பட்ட தொழு நோய்க்கு தீா்வு கிடைக்கும். இதை உட்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.
வேறுபெயா்கள்
கல்லால் பூப்பருத்தி, புவிராசன், அா்த்தநாாி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்று பெயா்கள் உள்ளன.
தாவரப்பெயா்
THESPESIA POPULNEA இது LVACEAE என்ற தாவரக்குடும்பத்தைச் சோ்ந்தது.